'குவெஸ்ட் நெட் (Quest Net முன்பு Gold Quest)' தங்கக் காசு மல்ட்டி மார்கெட்டிங் ஏமாற்று வேலை அம்பலமாகிவிட்டது. இப்போது தான் எல்லோரும் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். காவல்துறை கண்டிப்பாக எல்லோருக்கும் போட்ட பணம் திரும்பக் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யும் என்று அறிவித்திருக்கிறது.
இதில் பணம் போட்டு ஏமாந்தவர்கள் பெரும்பாலோனோர் கணினி நிறுவனத்தில் பணிபுரிபவர்கள். ஆனால் இவர்கள் அனைவரும் வெளிப்படையாக புகார் தெரிவிப்பது கடினம் தான். ஏனென்றால் இந்தப் பணம் இவர்களுக்கு ஒரு மாதம் அல்லது அரைமாதச் சம்பளம் தான்.
சரி. இது என்ன முறைகேடு என்பதைப் பார்க்கலாம். குவெஸ்ட் நெட் என்பது ஒரு பன்னாட்டு மல்ட்டி மார்க்கெட்டிங் நிறுவனம். இதன் தலைமை அலுவலகம் ஹாங்காங்கில் உள்ளது. இவர்களது தங்கக்காசுத் திட்டத்தில் சேர முதலில் 33000 ரூபாய் கட்ட வேண்டும். (முதலில் குறைவாக இருந்திருக்கலாம். அல்லது ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கட்டணம் வசூலித்திருக்கலாம். பெங்களூரில் வசூலித்த தொகை 33,000). அதற்குப் பதில் அவர்கள் ஒரு தங்கக்காசு அல்லது சில வெள்ளிக்காசுகள் கொடுப்பார்கள். அந்தக் காசு உலகில் வேறு எங்கும் கிடைக்காது. அந்தக் காசின் உருவம்,வடிவத்தை இவர்கள் பதிவு செய்து வைத்திருப்பார்கள். எனவே இந்தக் காசை வெளியில் யாரும் போலியாகத் தயாரிக்க முடியாது(!?).
இந்தக் காசுகளை நாம் இணைய தளத்தில் விற்கலாம். வாங்குவதற்கு வெளிநாட்டு மக்கள் அலைமோதுவார்களாம். ஏனென்றால் அந்தக் காசு வேறு எங்கும் கிடைக்காதாம். இப்படியெல்லாம் முதலில் அவர்களது அறிமுகக் கூட்டத்தில் சொல்வார்கள். அதன் பின்னர் நாம் நமக்குக் கீழே 3 பேரை இந்தத் திட்டத்தில் சேர்த்து விடவேண்டும். அப்படி சேர்த்து விட்டால் அதற்கான கமிசன் தொகை நமக்குக் கிடைக்கும். அது போக அவர்களுக்குக் கீழே ஆட்கள் சேரச்சேர அதற்கான கமிசன் தொகையும் நமக்குக் கிடைக்கும் என்றெல்லாம் சொல்வார்கள்.
அந்தக் காசை இணைய வர்த்தகத்தின் மூலம் மட்டுமே விற்க முடியும். அதன் எடை வெறும் 6கிராம்தான். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் 33,000 கட்டிவிட்டு நம்மால் மூன்று பேரை சேர்த்துவிட முடியாவிட்டால் வெறும் 6கிராம் காசோடு திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான். மிச்சப்பணம் அவ்வளவுதான். கேட்பதற்குச் சுலபமான வழியாகத் தெரியும், மூன்று பேரைச் சேர்ப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்.
இதன் அறிமுகக் கூட்டமே பயங்கர பரபரப்புடன் நடக்கும். முதலில் நவநாகரீகமான இளைஞர்கள், இளைஞிகள் மேடைக்கு வந்து "நான் அந்தக் கம்பெனியில் வேலை பார்க்கிறேன், இந்தக் கம்பெனியில் வேலை பார்க்கிறேன், போன வருசம் இந்தத் திட்டத்தில் சேர்ந்தேன், இப்போ வாராவாரம் எனக்கு 30,000 கமிசன் கிடைக்கிறது, நான் கூட முதலில் யோசித்தேன் இதில் சேரலாமா என்று ஆனால் இன்று நான் கோடீஸ்வரி, நீங்கள் ஆக எப்போ பணக்காரர் ஆகப் போகிறீர்கள்?, இப்போ கூட நான் விமானத்தில் தான் இங்கு வந்தேன். போனவாரம் நான் ஹோண்டா சிட்டி கார் வாங்கினேன் நீங்களும் வாங்க வேண்டாமா? கையில் வெறுமனே காசை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?" என்றெல்லாம் விடுதியில் லேகியம் விற்கும் போலி மருத்துவர்கள் போல மூளைச் சலவை செய்வார்கள்.
இதில் வெளிப்படையாகத் தெரியும் குளறுபடிகள் என்னென்ன?
1. ஒரு சாதாரண தங்கக்காசினை வாங்குவதற்கு இணையத்தில் எப்படி மக்கள் இவ்வாறு போட்டி போடுவார்கள்?
2. நமக்குக் கீழே இருப்பவர்கள் ஆள் சேர்த்துவிட்டால் நமக்கும் கமிசன் கிடைக்கும் என்பதை எப்படி நம்புவது? நமக்குக் கீழே இருப்பவர்கள் ஆள் சேர்த்துவிடுவது நமக்கு எப்படித் தெரியும்?
3. இந்தத் திட்டத்தில் யாரும் நேரடியாகச் சேரமுடியாது. யாராவது உறுப்பினராக இருந்தால் அவர் மூலம் மட்டுமே இந்தத் திட்டத்தில் சேர முடியும். இதன் மூலம் நிறுவனத்துக்கும் சேருபவருக்கும் நேரடித் தொடர்பு இல்லாமல் போய்விடுகிறது.
இப்போது இத்திட்டத்தில் சேர்ந்த எல்லோருமே யாரைக் கேட்பதென்று தெரியாமல் தம்மைச் சேர்த்துவிட்ட நண்பர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் காசின் தற்போதைய மதிப்பு EBayல் 80,000 ரூபாயாம். (யாராவது உறுதிப்படுத்துங்க). எனது நண்பர்கள் வட்டத்தில் மட்டும் இதில் 6 பேர் ஏமாந்திருக்கிறார்கள். அதில் ஒருவனுக்கு மட்டுமே தங்கக்காசு அனுப்பப்பட்டிருக்கிறது. வேறு யாருக்கும் வரவில்லை. அனைவரும் மென்பொருள் துறையில் இருப்பவர்கள். இந்த நிறுவனம் மூடப்பட்ட செய்தியே பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை. விசயம் கேள்விப்பட்டும் யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரை கொஞ்சம் பணம் மட்டுமே போயிருக்கிறது.
இன்னமும் 'இந்த நிறுவனம் நல்ல நிறுவனம், இதைப் பற்றித் தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள், எனக்கு போனவாரம் கூட செக் வந்தது காட்டட்டுமா?' என்றெல்லாம் சிலர் இணையத்தில் சவால் விடுகிறார்கள். அவர்களுக்குச் சில தகவல்கள்
1. காவல்துறையிடம் நிறுவனத்தைப் பற்றிப் புகார் கொடுத்ததும் அதன் சென்னை கிளை தலைமை நிர்வாகி(கூட்டத்தலைவன்?) ஹாங்காங் சென்று மாயமானது ஏன்? சட்டப்படி பிரச்சினையை எதிர் கொண்டிருக்கலாமே? இந்நிறுவனம் 2003லேயே ஒருமுறை மோசடிக்காக மூடப்பட்டு சீல்வைக்கப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
2. இந்த நிறுவனம் பிலிப்பைன்ஸ், நேபாளம், இலங்கையில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளதாம். இந்நிறுவனத்தின் உரிமையாளரை சர்வதேச காவல்துறை தேடி வருகிறது.
வழக்குப் பதிவு செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்ட நிறுவனம் திரும்பவும் ஜெகஜ்ஜோதியாகத் திரும்பவும் கடை(வலை?) விரிக்கிறதென்றால் நம் சட்டம் அவ்வளவு எளிதில் ஏமாற்றப்படக் கூடியதா? :(
தொடரும் இது போன்ற மோசடிகளுக்கு யார் காரணம்?
சட்டம் சரியில்லை என்பதெல்லாம் அப்புறம். சொல்வதற்கே சங்கடமாக உள்ளது. மன்னிக்கவும். பணம் போட்டு ஏமாந்த மக்களை காயப்படுத்தும் நோக்கில் சொல்லவில்லை. விரைவில் பணம் பார்க்க வேண்டும் என்ற மக்களின் பேராசையே காரணம். யாரும் ஒரே நாளில் பணக்காரனாக முடியாது. கூடுதல் வருமானம் வேண்டுமென்றால் தற்போது எத்தனையோ வழிகள் உள்ளன. நல்ல நல்ல லாபம் தரும் மியூட்சுவல் பண்ட்கள் எவ்வளவோ உள்ளன. இன்னும் அதிகம் வேண்டுமானால் பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளன. அதன் மூலம் திறமையுடன் செயல்பட்டு நல்ல வருமானம் பார்க்கலாம்.
மென்பொருள்துறை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். அப்பாவி, படிக்காத நடுத்தர வர்க்க மக்கள்தான் சீட்டுக்கம்பெனிகளில் பணம் போட்டு ஏமாற்றப்பட்டார்கள் என்றால் படித்தவர்களும் இப்படி இருக்க வேண்டுமா? பெரும்பாலானோர்க்கு அரை மாதச் சம்பளம்தான், அதற்காக தெருவில் ஏமாற்றிப் பிழைப்பவனிடம் காசை அள்ளி வீச வேண்டுமா? :(
Datas from http://ponvandu.blogspot.com
Post a Comment
Thanks for the valuable comment, Will publish it shortly - Bulls